இந்துமதமும் தமிழரும்! – பேரறிஞர் அண்ணாவின் கட்டுரை : ‘நக்கீரன்’ என்ற புனைப் பெயரில் வந்தது

இந்துமதமும் தமிழரும்!

சென்ற வாரம் ‘திராவிடநாடு” இதழில் எனது தோழன் பரதன் கேட்டுக்கொண்டதற்கேற்ப, இவ்வாரத்திலிருந்து, இந்து மதம் தமிழ்மக்களுக்கு ஏற்புடையதுதானா? என்பது பற்றிய கருத்துக்களை, ‘இந்துமதமுந் தமிழரும்’ என்ற தலைப்போடு எழுத முன்வந்துள்ளேன்.

இந்துமதமென்றால், அது எங்களுடையது என்றெண்ணி இறும்பூதெய்தி இருக்கும் தமிழ் மக்கள் பலர் நம்மைச் சூழ்ந்திருக் கின்றனர் என்பதை நாமறிவோம். இந்துமதமென்றால், அது ஆரியர்கள் தங்கள் வாழ்க்கைக் கப்பலை ஓட்டிச்செல்வதற்காக வெட்டிய ஒரு அகழ் என்பதை நம்மவர் பலர் இன்னுந் தெரிந்து கொள்ள முடியாத நிலையிலேயே இருக்கின்றனர் என்பதையும் நாம் அறிவோம். எனவே, இவ்விந்துமதத்தைப் பற்றிய உண்மை களைத் தமிழ்மக்கள் அனைவரும் தெரிந்து தெளிதல் பெரிதும் இன்றியமையாததாகும்.

இவ்விந்துமதம் தமிழ்நாட்டிற் பரவிய காலம், ஆரியர்கள் நம் நாட்டில் வந்து குடியேறித் தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்தத் தொடங்கிய காலத்தைக் குறிப்பதாகும். ஆரியர்கள் நம் நாட்டுக்கு வருமுன் இந்துமதம் என்ற ஒரு மதமோ அன்றி வேறு மதங்களோ இருந்தனவென்று துணிவதற்குத் துளி சான்றுகூடக் கிடையாது. ஆகையால், ஆரிய மதமாகிய இவ் இந்துமதத்தைத் தமிழ் மக்களுடைய மதம் என்றுரைக்க ஆராய்ச்சித்துறை கண்ட அறிவுடைய எவரும் முன்வரமாட்டார்கள். ஆரியர்கள் நம் நாட்டுக்கு வருவதற்குப் பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்பிருந்தே சிறந்த நாகரிக வாழ்க்கையை மேற்கொண்டு செம்மை நெறியில் ஒழுகி வந்த தமிழ்மக்களுக்கு, இடைப்பட்ட காலத்தில் ஆரியர்களால் கொண்டுவந்து புகுத்தப்பட்ட இந்துமதம் எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல வென்பதை எடுத்துக்காட்டுதலே இக்கட்டுரையின் நோக்கமாகும். இதனைத் ‘திராவிடநாடு’ பகுதி பகுதியாகத் தொடர்ந்து வெளியிட்டுவரும்.

இப்போது இந்துமதம் என்று வைத்து வழங்கப்பட்டு வரும் மதத்திற்குப் பலர் பலவாறு பொருள் கூறுகின்றனர். அவற்றுட்சில வருமாறு: “இந்தியாவில் உள்ளவர்களின் மதமாதலால் இந்துமதம்” என்றும்; (இதுமேனாட்டறிஞரான மாக்ஸ்முல்லர் என்பவரின் கருத்து) சிந்துநதிக் கரையில் ஆரியர்கள் தங்கி யிருந்ததால், அவர்கள் இந்துக்கள் என்றும், இந்துமதத்தினர் என்றும் அழைக்கப்பெற்றனர் என்றும், பொருள் கூறுகின்றனர். ஆனால் மேற்சொன்ன இரண்டு காரணங்களும் பொய் என்பதை வலியுறுத்தி ஒரு உபநிடதம் அதன் உண்மைப் பொருளை விளக்கிக் காட்டுகின்றது. எப்படியெனில்,

“ஹிம்ஸாயாம் தூய தேயஸ: ஸ: ஹிந்துரி த்யபீதயதே.”

இதன் பொருள்:- எவன் ஒருவன் துன்பம் என்பதில் நின்று அல்லற்படுகின்றானோ அவன் இந்து என அழைக்கப்படுகிறான் என்பதாகும். எனவே, ஆரியர்கள் தங்களுக்கு இருக்க இடமும், உடுக்க உடையும், உண்ண உணவும் இன்றி ஊர்ஊராய்ச்சுற்றித் திரிந்து துன்புற்ற உண்மை பண்டைய வரலாறுகளால் வலியுறுவ தால் அவர்களை இந்துக்கள் என்றுகூறும் உபநிடதக் கருத்தையே நாமும் உண்மையெனக் கொள்ளல் வேண்டும். அற்றன்று ஆரியரல்லாத தமிழ்மக்களை இந்துக்கள் என்றழைப்பது பொருந்தாதோவெனக் கடாவுவார்க்கும் பொருந்தாதென்றே கூறுவோம். ஏனெனில் தமிழ்மக்கள் வாழ்க்கையை நடாத்த வகையறியாது ஊர் ஊராய்ச் சுற்றித்திரிந்து துன்புற்றசெய்தி எந்த வரலாற்று நூலிலும் காண்பதற்கில்லை. மற்று, ஆரியர் அல்லற்பட்டு அலைந்து திரிந்து துன்புற்றமைக்குச் சான்று பலஉள. விரிவஞ்சி ஒன்றிரண்டை மட்டும் ஈண்டெடுத்துக் காட்டுதும். ஆரியர்களின் முதல் நூலாகிய இருக்குவேத முதன் மண்டலத்தில் உள்ள 42-ஆம் பதிகத்தில் ஆரியர்கள் தங்கள் தலைவனான

இந்திரனை நோக்கிப் பின்வருமாறு வேண்டிக் கொள்ளுகிறார்கள். (1) “யாங்கள் செல்வத்தை எளிதில் அடையுமாறு செய்.

(2) புல்லடர்ந்திருக்கிற மேய்ச்சல் நிலங்களுக்கு எம்மை வழிகாட்டிச்செலுத்து.

(3) எங்களுக்கு வயிறுநிறைய உணவு கொடு.

(4) சுவித்ராளின் இளங்கன்றே, ஓ பகவானே துக்கிரனுடைய வீடுகளிடையே எங்களுக்கு நிலம்கிடைத்தல் வேண்டி, நடந்தபோரில் எங்களுக்கு உதவி செய்கின்றனை. ”

என்கின்ற இவ்விருக்குவேத உண்மைகள் ஆரியர்களின்மிடிப்பட்ட வாழ்க்கையைத் தெளிவாகக் காட்டுகின்ற தாகையால், இந்துக்கள் என்று அழைப்பதற்கு ஆரியமக்களே உரித்தானவர்கள் என்பது தெற்றெனப் புலனாகின்றது.

இனித் தமிழ் மக்கள் இருக்குவேத காலத்திற்கு முன்பிருந்தே சிறந்த செல்வ வாழ்க்கையில் திளைத்திருந்தனர் என்பதற்கும் அவ்விருக்குவேதமே பகர்கின்றது. அவற்றிலும் ஒன்றிரண்டு எடுத்துக் காட்டுதும். இருக்குவேத முதல் மண்டிலம் 104-ஆம் பதிகங்களில் பின்வருமாறு கூறப்பட்டள்ளது.

(1) “பொன் அணிகளாலும் மணிகளாலும் தம்மை ஒப்பனை

செய்து கொண்ட அவர்கள் (தமிழர்கள்) இந்நிலத்தை மறைத்து

ஓர் அடை விரித்தார்கள். (2) இந்நிலத்தில் கடைக்கோடி வரை ஊடுருவிப் பரவிநிற்கும் அவர்கள் (தமிழர்கள்) தம் மந்திர ஆற்றலால் இந்திரனை

வெல்ல மாட்டாராயினர்.

(3) இந்திரன் தனது குலிசப் படையால் அவர் (தமிழர்) களுடைய

கோட்டைகளைப் பிளந்து துகளாக்கினான். (4) குயவனுடைய மனைவியர் இருவரும் பாலிலே தலை முழுகுகின்றனர்! அவர்கள் சிபாயாற்றின் ஆழத்தில்

அமிழ்த்தப்படுவாராக.”

என்ற இவ்விருக்குவேத உண்மைகள் தமிழ் மக்களின் சிறந்த செல்வ வாழ்க்கையை நன்கு தெளிவுபடக் காட்டுவதோடு, தமிழ் மக்கள் எல்லாரும் செய்தொழிலை வேற்றுமையால் உயர்வு தாழ்வில்லாமல் ஒரே தன்மையாய்த் தங்கள் செல்வத்தினாற் பெறக்கூடிய இன்பங்களை நுகர்ந்து வந்தனர் என்பது, “குயவனுடைய மனைவியர் பாலிலே தலைமுழுகினார்கள்” என்பவை தெரியக் கிடக்கின்றது. என்றிதுகாறும் கூறியது கொண்டு தமிழ் மக்கள் எக்காரணத்தைக் கொண்டும் இந்துக்கள் என்றோ இந்து மதத்தினர் என்றே அழைக்கப்பட மாட்டார்கள் என்பது யாதொரு ஐயுறவுமின்றித் துணியப்படும். எனவே, இதுகாறும் தமிழ்மக்களை இந்துக்கள் என்ற பேதைமையினோர் இனி அவ்வாறு அழைக்க மாட்டார்கள் என்பது ஒரு தலை.

வடக்கே இமயமலைச் சாரலில் இருக்கும் கேதாரம் என்னும் இடத்திற்கும் தெற்கே தஞ்சாவூருக்கு அருகியிலுள்ள திருவையாறு என்னும் இடத்திற்கும் இடையேயுள்ள தொலைவு ஏறக்குறைய 2500-கல் இருக்கும். இவ்வளவு தொலைவைத் திருநாவுக்கரசர் தம்முடைய காற்சுவடு நிலத்திற் படாமல் எப்படி வந்தார் என்பது தெரியவில்லை. ஒரு வேளை நீருள் மூழ்கிய படியே காற்சுவடு நிலத்திற் படாமல் வந்தார் என்றால், அத்தகைய ஒரு நீர்த்தொடர் கேதாரத்திற்கும் திருவையாற்றுக்கும் இருக்கிறதா என்பதை அறிய நிலநூல் ஆராய்ச்சி வல்லுநர்க்கு விட்டுவிட்டாலும், 2500-க்கு தொலைவிற்குத் தொடர்பாகவுள்ள நீர்ப்பரப்பை ஒருவன் எங்ஙனம் ஊடுருவி வர முடியுமென்பதை யாவது இத்தகைய புராணப் புளுகுகளை நம்பும் அன்பர்கள் ஆராய்ந்து பாராமல் இருப்பது பெரிதும் வருந்தத் தக்கதும் இரங்கத் தக்கதுமாகவே இருக்கிறது. தண்ணீரில் மிதந்துசெல்வது அதவாது நீந்திச் செல்வதில் பழக்கமுள்ளவர்கள் கூட ஐந்து அல்லது பத்துக்கல் தொலைவான நீர்ப்பரப்பைத் தானும் கடக்க முடியாது. தண்ணீரில் நீந்திச் செல்வதிலோ அன்றி அதனுள் மூழ்கிச் செல்வதிலோ மிகவுந்திறமை வாய்ந்தவர்கள் தங்கள் கனவிலும் எண்ணமுடியாத ஒரு பெருந்தொலைவை, அத்துறையில் ஒரு சிறிதும் பழக்கமோ பயிற்சியோ இல்லாத திருநாவுக்கரசர் செய்து முடித்தார் என்பது வியப்பினும் வியப்பாகவன்றோ இருக்கிறது. இத்தகைய ஒரு அண்டப்புளுகை இந்து மதம் போன்ற மதநூல்களிலன்றி வேறெங்கேனும் காண முடியுமா? தமிழ் மக்களை இந்துமதமென்னும் படுகுழியில் வீழ்த்தி அவர்களைத் தங்கள் அடிமைகளாக ஆக்குவதற்கு ஆரியர்களே புனைந்து வைத்த இத்தகைய கதைகளை இனிமேலாவது ஆராய்ச்சிக்கண் கொண்டு நோக்கி இயற்கை வழி நடக்க முயல்வது இனித் தமிழ்மக்கள் கடைப்பிடியாய்க் கொளற் பாலதொன்றாம்.

இனி, அக்கதையில், தமிழ்மக்கள் தங்கள், கருத்தைச் செலுத்திப் பார்க்க வேண்டியதொன்றுண்டு. அதாவது, திருநாவுக்கரசர் அசையமுடியாது களைப்புற்றுக் கிடந்த இடத்திற்கு வந்து அவருடன் உரையாடியவர், திருநாவுக்கரசரை நோக்கி, “நீர் உமது உடம்பிலுள்ள உறுப்புக்கள் எல்லாம் அழிந்து போக வருத்தத்தோடும் இந்தக் கொடிய காட்டில் எதன் பொருட்டாக வந்தீர்” என்று வினவியதாகவும், அதற்குத் திருநாவுக்கரசர், “நமது கடவுளாகிய சிவபெருமான் வடகைலையிலே பார்வதி அம்மையாரோடு வீற்றிருக்கும் காட்சியைக் கண்டு களிக்க விரும்பி வந்தேன்” என்று விடை பகர்ந்ததாகவும், அதற்கு அவர் “தேவர்களாலும் அடையப் படுவதற்கு அரிதாகிய திருக்கைலாயத்தை மக்களால் அடையப் படுவது ஆகக்கூடிய காரியமா? நீர் இந்தக்கொடுஞ் சுரத்தில் வந்து என் செய்தீர்? இனி நீர் திரும்பிவிடுதலே நலம்” என்று கூறியதாக வும்; திருநாவுக்கரசர் திருக்கைலாய மலையில் வீற்றிருக்கின்ற சிவபெருமானைக் கண்டன்றித் திரும்பேன்” என்று கூறி மறுத்த தாகவும்; திருநாவுக்கரசரின் உறுதிப்பாட்டையும் விடாப் பிடியையும் துணிவையுங்கண்ட அந்தப் பேர்வழி (ஆள்வடிவில் வந்ததாகச் சொல்லப்படும் சிவன்) மறைந்து நின்று, “நாவுக் கரசனே எழுந்திரு” என்ற உடனே திருநாவுக்கரசர் அழிந்த உறுப்புக்கள் எல்லாம் முன்போல நிரம்பப்பெற்று அழகிய வடிவோடும் எழுந்து, “சுவாமி, தேவரீர் திருக்கைலாய மலை யில் எழுந்தருளியிருக்கின்ற வடிவத்தைக் கண்டு வணங்க அருள் செய்யும்” என்று வேண்டிக்கொண்டதாகவும்; அதற்கு அவர் (சிவன்) ‘நீ இந்தத் தடாகத்திலே முழுகித் திருவையாற்றிலுள்ள குளத்திலே கிளம்பிக், கைலாயமலையில் வீற்றிருந்தபடி காணப்படும் நமது காட்சியை அந்த இடத்திலே கண்டு வணங்கு” என்று கூறியதாகவும் பெரிய புராணத்திற் காணப்படு கின்றது. திருநாவுக்கரசர் கதையின் பிற்பகுதியாகிய இந்த இடம்தான் பெரிதும் ஆராய்ச்சிக்குரியதாய் இருப்பதோடு தமிழ் மக்கள் கருத்தூன்றிப் பார்க்க வேண்டியதாகவும் இருக்கிறது.

இந்து மதத்தின் ஒரு பிரிவாகிய சைவமதத்திற்குத் தலைவர் கள், திருநாவுக்கரசர், திருஞான சம்பந்தர், சுந்தரர் மாணிக்க வாசகர் என நால்வர் என்று சைவநூல்கள் நுவல்கின்றன. எனவே, இந்நால்வரும் திருநாவுக்கரசர் ஒரு தமிழன் என்பதும் மற்றைய மூவரும் பார்ப்பனர் என்பதும் நினைவில் வைக்கப்பட்டு, நாம் கூறும் உண்மைகளை ஆராய வேண்டியது தமிழ்மக்கள் கடனாகும். திருநாவுக்கரசர் காலம் இற்றைக்கு ஆயிரம் ஆண்டுகட்கு முற்பட்டதாய் இருத்தல் வேண்டுமென்பது ஆராய்ச்சியாற் புலனாகின்றது. ஆரியர்கள் தமிழ்நாட்டிற்கு வந்து நிலைபெற்றுத் தங்கள் முழு ‘ஆதிக்கத்தையும் செலுத்தத் தொடங்கிய காலம் இன்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்டதாய் இருத்தல் வேண்டு மென்பதும் ஆராய்ச்சியாளர் கண்ட முடிபாகும். எனவே, திருநாவுக்கரசர் தோன்றிய காலம் ஆரிய மதமாகிய இந்துமதம் தமிழ் நாட்டில் வேரூன்றி நிலை பெற்ற காலமாகும். அக்காலத்தில் பிறந்த தமிழ் மகனாகிய திருநாவுக்கரசரும் இந்து மதத்தின் ஒரு பிரிவாகிய சைவமதக் கொள்கைகளையே பெரிதும் பின்பற்றி ஒழுகி வந்தாராயினும், அவர் இளமையிலே கல்வி பயின்று அறிவு நிரம்பப் பெற்று இருந்தவராதலின், அவருக்கு ஆரிய மதமாகிய சைவமதத்தில் உண்மை எதுவும் இல்லை என்பது புலப்பட்டது.

ஆரியர்களால் உண்டாக்கப்பட்ட சைவமதமானது பார்ப்பனரின் பிழைப்புக்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு பொய்மத மென்று உணர்ந்த திருநாவுக்கரசர், அதனை வெறுத்துச், சமணமதத்தைத் தழுவி அம்மத நூல்களிலே பெரும் புலமை வாய்ந்து, தருமசேனர் என்ற சிறப்புப் பெயருடன் சமணர்களிற் றலைசிறந்து விளங்கினார். திருநாவுக்கரசரின் அறிவு நுட்பத்தை யும், அவர் சைவமதத்தை வெறுத்துச் சமண மதத்தைத் தழுவியதையுங்கண்ட இந்துமதப் பார்ப்பனர்கள், தங்கள் பிழைப்புக்கு மண்போட ஒரு தமிழன் தோன்றிவிட்டானே; இவனை எப்படியாவது நம் வயப்படுத்த வேண்டும், இல்லையேல் இவனைத் தொலைத்துவிட வேண்டும் என்று கருதியவர்களாய்ப் பல சூழ்ச்சிகள் செய்து, மீண்டும் அவர் சைவமதத்தைத் தழுவும்படி செய்தார்கள். ஆயினும், நமது தமிழ் வீரனாகிய திருநாவுக்கரசர் ஆரியர்களின் கொடுமைக்கஞ்சிச் சைவ மதத்தில் இருப்பதாகக் காட்டிக்கொண்டாரே யன்றி உண்மையான சைவப்பற்று அவருக்கு உண்டாகவில்லை. பார்ப்பனர்களின் சூழ்ச்சியால் ஏவப்பட்ட திருநாவுக்கரசரின் தமக்கையாராகிய திலகவதியாரை மகிழ்விக்கும் பொருட் டாகவே அவர் தம்மை ஒருசைவனாகக் காட்டிக் கொண்டார். திருநாவுக்கரசரின் தாய் தந்தையர் இறந்தபின், அவருடைய உறவினர் ஒருவரும் இன்மையால், அவரைத் திடீரென்று வெறுப்பது தகாதென்று கருதிய திருநாவுக்கரசர், தமது தமக்கையார் சொற்படி, தாம் ஒரு சைவனென்று பிறர் கருதும்படி தம்முடைய வெளிநடத்தையாற் காண்பித்தார். சூழ்ச்சியிற் கைதேர்ந்த பார்ப்பனர் திருநாவுக்கரசரின் உளப்பான்மையை எப்படியோ அறிந்து, அவருக்கு எந்தவகையிலாவது சைவத்தில் உண்மையான பற்றுதலும் நம்பிக்கையும் உண்டாக்குதல் வேண்டுமென்று கருதி, தங்கள் மரபிற் பிறந்த பார்ப்பனச் சிறுவனாகிய திருஞானசம்பந்தர் என்பார் சீர்காழியில் இருக்கிறார் என்றும், அவர் தமது மூன்றாம் ஆண்டிலேயே சிவ பெருமானை நேரிற்கண்டு, மனைவியாராகிய உமை யம்மையின் முலைப்பாலை உண்டு அவர் அருள் விளையாட்டுப் புரிந்துகொண்டிருக்கிறார் என்றும், அவரைப் பற்றி வானளாவப் புகழ்ந்து கூறினார்கள். இதனைக் கேட்ட திருநாவுக் கரசருக்கு அச்சிறுவனைப் போய்ப் பார்க்க வேண்டுமென்ற விருப்பமுண்டாகிச் சீர்காழிக்குச் சென்று அவரைக் கண்டார். விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்றபடி, பார்ப்பனச் சிறுவனாகிய அந்தத் திருஞானசம்பந்தர், தம்மையும் தம்மினத் தவரையும் தமிழ்மக்களினின்றும் வேறுபிரித்துக் காண்பிக்கும் முறையில், திருநாவுக்கரசரைக் கண்டவுடனே, ‘அப்பரே உம் முடைய கடவுளைப் பாடும்’ என்று கூறினாராம். தமிழ்மக்களே, பாருங்கள் பார்ப்பனக் குறும்பை! மீன்குஞ்சுக்கு நீந்தக் கற்றுக் கொடுக்க வேண்டுமா? என்பார்களே; அதுபோலச் சம்பந்தர் ஒரு சிறுவனாய் இருந்தபோதிலும், தான் ஒரு பார்ப்பனன் என்பதும், அதற்கேற்பத் தான் வழிபடும் கடவுளும் வேறென்பதையுங் காட்டவே, நாவுக்கரசரை நோக்கி, “உம்முடைய கடவுளைப் பாடும்” என்று கேட்டார். அற்றேல் ‘உம்முடைய கடவுள் நம்முடைய கடவுள்’ என்ற பிரிவினை. எதற்காக அந்த இடத்தில் எழுந்த தென்பதனைத் தமிழ்மக்கள் ஊன்றிப்பார்த்தல் வேண்டும். சிவன் ஒரு பார்ப்பனக் கடவுள் என்பதற்கறிகுறியாகவே, இஞ்ஞான்றுங்கூடச் சிவன்கோயில்களில் நடைபெறும் வழிபாட்டு விழாக்காலங்களில் வடமொழிச் சொற்களாலேயே சிவவழிபாடு செய்தலும், வாழ்த்தொலிகள் கூறுதலும் நடை பெற்று வருகின்றன. தமிழ்மறை என்று சிலபோலித் தமிழரால் பறைசாற்றப்படும் தேவார – திருவாசகங்கட்குத் தினைத் துணை யேனும் மதிப்போ செல்வாக்கோ அந்தச்சிவன் கோயில்களிற் கிடையாது. பார்ப்பனர் வடமொழி மந்திரங்களால் வழிபாடு செய்து திருநீறு பெற்று வெளியே சென்ற பின்னர்தான், எச்சிற் சோற்றைக் காத்திருந்து உண்பார் போலத், தமிழ்மறையாகிய தேவாரம் ஓதப்படுகின்றது. இந்த அழகோவிய அமைப்பில், தேவார – திருவாசகங்களெல்லாம் சிவனால் அடியெடுத்துக் கொடுத்துப் பாடப்பட்டனவாம் என்றும் சில தமிழ்மக்கள் வெட்கமின்றிக் கூறித்திரிகின்றனர். உண்மையாகவே, சிவன் ஒரு தமிழ்க் கடவுளாயும், தேவார, திருவாசகங்களெல்லாம் அந்தக் கடவுளாலேயே அடியெடுத்துக் கொடுக்கப் பட்டனவாயும் இருந்தால், தமக்கும் தம்மை வழிபடும் தமிழ்மக்களுக்கும் விளங்காத வடமொழி மந்திரங்கட்கு முதலிடம் அளிப்பாரா என்பதனைத் தமிழ்மக்கள் இனிமேலாவது எண்ணிப்பார்த்து இவ்விந்துச் சூழலினின்றும் தப்பித்துத் தன்மானத்தோடுவாழ முயலவேண்டாமா?

இனித், திருநாவுக்கரசர் பல நாட்கள்வரை திருஞான சம்பந்தர் கூடவே இருந்து, அவர் செல்லும் இடங்களுக் கெல்லாம் அவருடன் சென்று இருந்ததுமாகிய சைவமதத்தில் ஏதாவது உண்மை இருக்கிறதா வென்று அறிய முயன்றார். ஆனால், அவர் திருஞானசம்பந்தரின் பல்லக்கைச் சுமந்ததைத் தவிர வேறுபயன் ஒன்றும் அடையவில்லை. பார்ப்பனக் கும்பலிற் சேர்ந்து சென்ற தமிழனாகிய திருநாவுக்கரசர், அவர்கள் இட்டபணியன்றி

வேறென்ன எதிர்பார்க்க முடியும்! அறிவிலும் ஆண்டிலும் முதிர்ந்த ஒரு தமிழன், மூன்றாண்டு நிரம்பப்பெறாத ஒரு பார்ப்பனச் சிறுவனுக்குப் பல்லக்குச் சுமந்தான் என்று எழுதியிருக்கும் புராணத்தைப் படிக்கும் எந்த உண்மைத் தமிழனுக்காவது குருதி கொதியாதிருக்குமா?

பர்ப்பானர்களின் தூண்டுதலின் பேரில் திருஞான சம்பந்தரைப் பார்க்கச் சென்ற திருநாவுக்கரசர் அவரை விட்டுப் பிரிந்து தனியாகப் பல கோயில்கட்குச் சென்று, இந்து மதத்தின் பேரால் அங்கங்கே நிகழுஞ் செயல்களைப் பார்த்து வந்தார். தமிழ்நாட்டிலே இந்துமதக் கொள்கைகளை நிலைநாட்டுவதன் வாயிலாகத் தமிழ்மக்களை இழிவுபடுத்துவதையே குறிக் கோளாகக் கொண்டு, பார்ப்பனர்களால் நடத்தப்பட்டுவரும் சிவன் கோயில்களில் நிகழும் கொடுமைகளைக் கண்ட திருநாவுக்கரசர், தமிழ்மக்களின் மானத்தைக் காப்பாற்றும் முறையில் பலசீர்திருத்தங்களைச் செய்ய முயன்றார். ஆனால், அவர் அடைந்த பயன் என்ன? திருத்தூங்கானை மாடம் என்னும் சிவன் கோயிலுக்கு அவர் சென்றிருந்தபோது, அங்கு தமிழ் மக்களை மிகவும் இழிவாக நடத்துவதைக் கண்டு, பார்ப்பனர் களின் அறியாமைக்காகப் பெரிதும் வருந்தி அவர்களைத் தம் அறிவுச் சுடர் கொண்டு திருத்த முயன்றார். அவர் இங்ஙனம் கூறியதைக் கண்ட அக்கோயிற் பார்ப்பனர்கள் வெகுண்டு ஒரு தமிழனாகிய சூத்திரப்பயலா எமக்கு அறிவுபுகட்ட வருவது’ என்று சீற்றங் கொண்டவர்களாய், அக்கோயிலிற் கிடந்த ஒரு சூலத்தை எடுத்து நெருப்பில் நன்றாகப் பழுக்கக் காய்ச்சித் திருநாவுக்கரசருடைய தோளிலே சுட்டார்கள். இந்நிகழ்ச்சி பெரிய புராணத்தில் உள்ளது. ஆனால், புராணப் புளுகர்கள் வழக்கமாகக் கையாளும் சூழ்ச்சி இந்நிகழ்ச்சியிலும் புகுந்து விட்டது. பார்ப்பனர்களால் திருநாவுக்கரசருக்கு ஏற்பட்ட இழிவை மறைத்து அதற்கு ஒரு கடவுட்டன்மை கற்பிக்கும் முறை யில், திருநாவுக்கரசர் சமணம் புக்கு மீண்ட தீட்டைப் போக்கு வதற்காகச் சிவனே தமது சூலத்தினால் திருநாவுக்கரசருடைய தோளில் ஒரு அடையாளத்தைப் பொறித்தார் என்ற புனை வுரையை மிகவும் திறமையாகப் புகுத்தி அதனை எல்லாரும் நம்பும்படியுஞ் செய்து விட்டனர். இன்றும் பகுத்தறிவுக் கொவ்வா அந்நிகழ்ச்சியை நம்பும் பேதைமையினோர் பலர் உளர். சிவன் என்ற பெயரால் வழங்கப்படும் அந்தப் பெருங் கடவுள், திருநாவுக்கரசருக்கு ஏற்பட்ட தீட்டைப் போக்குவதற்காகத் தம்முடைய சூலத்தால் அவருடைய தோளிலே ஒரு சூடு போட்டார் என்றால், அவரிடம் மதப்பித்தர்கள் கூறும் கடவுட்டன்மை சிறிதளவாவது இருக்கிறதாகக் கருத முடியுமா? மதநூல் இலக்கணப்படி, கடவுள் தமது திருநோக்கு ஒன்றினா லேயே அனைவருடைய மாசுகளையும் போக்கவல்ல ஆற்றல் படைத்தவர் என்றும், அவர் நினைத்த அளவிலேயே எல்லாக் காரியங்களையும் பிறருடையவும் பிறபொருள் களுடையவும் உதவி எதுவுமின்றித் தாமாகவே செய்து முடிக்கும் வன்மை பெற்றவர் என்றும் சொல்லப்படும் போது, ஈண்டுப் பேசப்படும் திருநாவுக்கரசரின் தீட்டைப் போக்குவதற்காகச் சிவன் தமது சூலத்தை எடுத்து அதனை நெருப்பிலே காய்ச்சித் ருநாவுக் கரசருடைய தோளிலே சுட்டார் என்பதை அறிவைப் பயன் படுத்திப் படிக்கும் எவரும் ஒப்புக்கொள்வரா? அன்றியும் மதம் விட்டு மதம் மாறும் மக்களுக்குத் தீட்டென்று சொல்லப்படும் ஒரு சிறுமை யாங்ஙனம் உண்டாகும்? பெண்களுக்குத் திங்களுக்கோர் முறை ஏற்படும் குருதிப் பெருக்கையும் தீட்டென்றே சொல்லுகிறார்கள். ஒரு மதத்தை ஒழித்துப் பிறிதொரு மதம்புகும் மக்களுக்கும் இத்தகைய தோற்றங்கள் யாதாயினும் உண்டாகின்றனவா என்று பார்த்தால், அப்படி எதுவும் ஏற்படுவதாகத் தெரியவில்லை. யாழ்ப்பாணம், திருநெல்வேலி முதலான ஊர்களிலுள்ள சைவர்கள் பலர் கிறித்துவ மதத்தைத் தழுவியிருக்கின்றனர். இவர்கள் இங்ஙனம் மதம்விட்டு மதம் புகுந்த காரணத்தால் அவர்களுக்கு ஏற்பட்ட தீட்டைப் போக்குவதற்காகக் கிறித்தவர் கடவுளான இயேசுவோ அல்லது பரமண்டிலங்களில் இருப்பதாகச் சொல்லப்படும் அவருடைய தந்தையோ (பிதாவோ) சிலுவை முதலான மதஅடையாளங் களால் யாதாயினும் சூடு போடுகின்றனரா? இல்லையே! ஆரியர்கள் தீங்கைச் செய்வதன் வாயிலாக இந்துக்களைத் தூய்மைப் படுத்தும் ஒரு பாசாங்கு போலவே, கிறித்தவக் குருமாரும் ‘ஞானஸ்நானம்’ என்ற பெயரால் ஏதோ செய்கின்றனர். இங்ஙனம் செய்வதால் முக்கிய மதத்தீட்டு நீங்கிவிட்டதாக அவர்கள் கருதிக் களிப்புறுகின்றனர். என்னே மடமை! திக்கை – ஞானஸ்நானம் முதலான மினுக்குவேலைகள் எல்லாம் மத ஆரியர்கள் தங்கள் மத வாணிகத்தை ஒழுங்காக நடத்துவதற்காகக் கையாளும் சூழ்ச்சிகளே, தீட்டென்று சொல்லப்படும் இக்கொடுமையான திட்டம் ஆரியமக்களால் கொண்டுவரப்பட்டுத் தமிழ்நாட்டிலே புகுத்தப்பட்ட ஒரு பொருளற்ற திட்டமென்பதே தமிழர் கொள்கையாகும். பிறப்பினால் உயர்வு தாழ்வு இல்லை என்ற கொள்கையை அடிப்படையாகக் கொண்டுள்ள தமிழ் மக்கள் முன்னிலையில், ஒருவன் ஒரு மதத்தை விட்டு இன்னொரு மதம் புகுவதால் தீட்டேற்படுகிற தென்றும், அதனைப் போக்குவதற்குத் தீக்கை-சூடு ஞானஸ்தானம் முதலான சடங்குகள் செய்ய வேண்டு மென்று கூறுவது எள்ளி நகையாடற்குரிய செய்தியேயாம். தீட்டு என்ற தமிழ்ச்சொல் துப்புரவின்மையைக் குறிக்கும் ஒரு சொல்லேயன்றி, மதாசிரியர்கள் கூற்றுப்படி மத மாறுதல்கள் முதலான காரியங்களைச் செய்வோர் தீட்டுப்பட்டவர்கள் என்பனவற்றிற்குப் பயன்படுத்தக் கூடிய சொல்லாக ஒருபோதும் ஆகாது. தீட்டென்று சொல்லப்படும் அழுக்கு அல்லது துப்புரவின்மையை குளித்தல் – முழுகுதல் – கழுவுதல் முதலான வற்றால் போக்க முடியுமேயன்றி நெருப்பிற் காச்சிய சூலத்தால் சுட்டு நீக்க முடியாது.

ஒன்றன் உண்மையை ஐயந்திரிபற அறிந்து கொள்ள வேண்டுமானால், அதற்குக் கருவியாகப் பொறுமை என்னுஞ் சிறந்த கொள்கையைக் கடைப்பிடித்தாலன்றி முடியா தென்பதனை நன்குணர்ந்த நாவுக்கரசர், இந்து மதத்தின் பேரால் தாம் அடைந்த இன்னலைப் பொறுத்துக்கொண்டு, இன்னும் பார்ப்பனர் செய்யுங் கொடுமைகளைப் பார்த்தறிய விரும்பிப் பின்னும் பல சிவன்கோவில்களுக்குச் சென்றார். திருச்சத்தி முற்றம் என்னும் கோயிலை அவர் அடைந்து பார்த்த போது, அங்கும் பார்ப்பனர் பல அடாத செயல்கள் செய்வதைக் கண்டு அவர்களைத் திருத்தமுயன்றார். அதனைக்கண்ட அவ்வூர்ப் பார்ப்பனர்கள் அவருக்கு நல்ல பாடம் கற்பிக்க எண்ணினார் களாயினும், அவர்களுக்கு அவ்வூரிற் போதிய செல்வாக்கு இல்லாமையினாலோ அல்லது வேறு காரணத்தாலோ அவரை ஒன்றுஞ் செய்யாது, ‘நீ நல்லூருக்கு வா, பார்த்துக் கொள்ளலாம்’ என்று சொல்லி விட்டு விட்டார்கள். பின் அவர் திருநல்லூர் என்னும் ஊரை அடைந்ததும், அங்கே அவரை நன்றாக நையப் புடைத்துத், தலையிலும் பிற இடங்களிலும் உதைத்து விரட்டி விட்டார்கள். இக் கொடுமைகளைக் கண்டு மனம்பொறாத நமது நாவுக்கரசர், “நினைந்துருகும் அடியாரை நைய வைத்தார்… நனைந்தனைய திருவடி என்தலைமேல் வைத்தார்…” என்ற சொற்றொடர்கள் அமைந்த தேவாரத்தால் விளக்கியுள்ளார்.

ஆனால், நாம் மேலே எடுத்துக் காட்டிய ‘நினைந்துருகும் அடியாரை நைய வைத்தார்’ என்ற சொற்றொடருக்குச் சைவ அன்பர்கள் கூறும் பொருள் ஒரு சிறிதும் அறிவுக்குப் பொருந்துவதாயில்லை. அதற்கவர்கள் கூறும் பொருள் இது: “கடவுளை நினைந்து உருகி வழிபடும் அடியார்களைத் துன்பங் களுக்கு ஆளாக்குவது சிவனுடைய இயல்பு” என்பதாகும். இக்கூற்றுக் கடவுள் நூலார் கொள்கையின்படியும், கடவுள் இலக்கணத்தைக்கூறும் மதநூல்களெல்லாம், கடவுளுக்கு எட்டுவிதமான குணங்கள் உண்டென்றும், அவ்வெட்டனுள், தாமாகவே எல்லாவற்றையும் உணரும் ஆற்றலுண்டு என்பதும், ஒன்றென்றும், கிடந்து கூறியுள்ளன. எனவே, கடவுள் தமது அடியார்களின் உளத்தூய்மையை அறிவதற்காகவும், அவர்கள், துன்பம் இன்பம் ஆகிய இருநிலைகளிலும் தங்கள் கொள்கை யினின்றும் ஒரு சிறிதும் மாறுபடார் என்பதற்காகவும் அவ்வடிய வர்கட்குத் துன்பத்ன நல்கி அதன் பின்னரே இன்பப்பேற்றை அளிக்கிறார் ஒரு கடவுள் என்றால், அந்தக் கடவுள் சிற்றறி வுடையவர்கள் என்று சொல்லப்படும் மக்களைக் காட்டிலும் எந்த வகையில் உயர்ந்தவர் என்பது எமக்கு விளங்கவில்லை. இயற்கை அறிவும், எல்லா வல்லமையும் அமைந்துள்ளதாகச் சொல்லப்படும் ஒரு கடவுள், தம்மை மெய்யன்போடு வழிபடும் அடியார் குழாங்களின் உண்மை நிலையை அறிவதன் பொருட்டாக அவர்களுக்கு மேலும்மேலும் துன்பத்தையே கொடுக்கிறார் என்பது ஒரு கேலிக் கூத்தேயாம். அற்றன்று, நீர் கூறுவது பொருந்தாது; கடவுள் தமது அடியவர்களைச் சோதிப்பதெல்லாம் தம்பொருட்டன்று; அடியவர்களின் அன்புப் பெருக்கையும் உறுதிப்பாட்டையும் உலகினர்க்குக் காட்டி அவர்களையும் அவ்வழிப்படுத்துதற் பொருட்டே இவ்வாறு திருவிளையாடல் புரிகின்றார் என்று கூறுவார் சிலர்க்கும் தக்க விடையிறுப்பாம். கடவுளைப் பார்க்கிலும் எல்லா வகையிலும் கீழ்நிலையிலுள்ள மக்கள், தங்களையொத்த ஒருவன் ஒரு குற்றத்தைச்செய்து விட்டால், அவனைத்திருத்தி நல்வழிப் படுத்துதற் பொருட்டு, அவன் புரிந்த குற்றத்தைப்பிறரும் செய்யாதிருக்கப் பலர் முன்னிலையில் அவனைத் தண்டித்து நல்வழிப்படுத்த முயல்கிறார்கள். இந்த முறையையே பேரறிவுப் பெரும் பொருளான கடவுளும் கையாளுகிறார் என்றால், அவருக்கும் பிறஉயிர்களுக்கும் உள்ள வேறுபாடுதான் யாதோ? யாம்அறிகிலேம். கடவுளை அறிந்த அல்லது கடவுள் என்ற ஒன்று உண்டென்ற கூற்றுக்கு நில்லா உரையை நம்பும் அன்பர்கள் தாம் இவ்வையப்பாடுகளை நீக்குதல் வேண்டும். கடவுட்டன்மை இது, மக்கட்டன்மை இது என்று பிரித்துக் காட்டி, கடவுளுக்கும் பிற உயிர்களுக்கும் உள்ள வேறுபாட்டையும் உயர்வு தாழ்வையும் விளக்கவேண்டும். அங்ஙனமன்றி, மக்கள் செய்கின்ற சிறுசிறு காரியங்களையே கடவுளுஞ் செய்கின்றார்; ஆதலால், கடவுள் மக்களைப் பார்க்கிலும் எந்தவகையில் உயர்ந்த வராவார் என்று கேட்கும் பகுத்தறிவாளன்மீது சீறி விழுவதும், கடவுள், எது வேண்டுமானாலும் செய்வார்; அவர் செயல்களில் தலையிடுவது மக்களாய்ப் பிறந்தோர்க்கு அடாது என்று தணிவு கூறுவதும் ஆகிய ஏமாற்றுதல்கள், கடவுட்டன்மை என்ற கண்மூடி வழக்கத்தை மண்மூடச்செய்து, கருத்தோடு வாழும் மக்கள் முன்னிலையில் செல்லாதென்பதை இனிமேலாவது உணர்ந்து மக்கட் பண்போடு வாழ முயல்வதே, மதமெனும் பேயால் பீடிக்கப்பட்டு மயங்கிக்கிடக்கும் மாந்தர்தம் செயலாம்.

மலடி மைந்தன் முயற்கொம்மை ஏணியாக அமைத்து வான் வெளியிலுள்ள மலரைப் பறித்து வந்தான் என்று ஒருவன் கூறும் கதையைப் போலத் தொடக்கமோ முடிவோ அற்ற ஒரு முழுமுதற் பொருளை மதநூல்கள் கூறும் வழியே சென்று அப்பெரும் பொருள் அளிக்கும் இன்பத்தைப் பெறலாம் என்று கூறுவது போன்ற அறியாமை பிறிதொன்றில்லை. மலடி மைந்தன் போன்றது கடவுள் முயற்கொம்பு போன்றது மதநூல்கள் கூறும் நெறி. வான் மலர் போன்றது கடவுள் அளிக்கும் பேரின்பம். இது காறும் கூறியவை கடவுளைப் பற்றிய சுருக்கமான விளக்கமாகும். இதிலும் தெளிவடைய மாட்டார்க்கு, விரும்பினால், பின்னும் தெளிவாக விளக்கப்படும். ஐயுறுவார் கடாவுக.

திருஞானசம்பந்தர் என்ற பார்ப்பனச் சிறுவனுக்கு அவனுடைய மூன்றாம் ஆண்டிலேயே, பரமசிவன் தமதருமை மனைவியாராகிய உமையம்மையாரோடு இடபத்தின்மீது ஏறிவந்து வான்வெளியிலே நின்றுகொண்டு சீர்காழியிலே ஒரு குளக்கரையிலே அழுதுகொண்டிருந்த அச்சம்பந்தரை உமையம்மைக்குச் சுட்டிக் காட்டி, “அதோபார் நமதருமைப் புதல்வன் பசியால் வாடி அழுதுகொண்டு நிற்கின்றான்; உனது முலைப்பாலை ஒருபொற்கிண்ணத்தில் கறந்து கொண்டு போய்க் கொடுத்து அவனுடைய பசியை ஆற்றி வா” என்று பரமசிவன் சொல்ல உமையம்மையும் அங்ஙனமே செய்ததாகப் பெரிய புராணம்கூறும் பல புதுமைகளில் ஒன்றாகிய இந்நிகழ்ச்சியைப் படித்த அல்லது கேட்ட ஒரு பகுத்தறிவாளன், இந்நிகழ்ச்சியை அப்படியே நம்பி மகிழும் ஒரு கடவுளன்பனை நோக்கி,அப்பனே! அரனடிமறவாத அன்பனே! சிவப்பழம்பெரும் பொருளைச் செம்மையாய் வழிபடும் சீலனே! சிவபெருமா னுடைய கட்டளையை மேற்கொண்ட உமையம்மையார் தமது முலைப்பாலைக் கறந்து அதனை ஒரு பொற்கிண்ணத்தில் பெய்து திருஞானசம்பந்தருக்குக் கொடுத்ததை நீர் நேரில் பார்த்தீரா?

அல்லது பெரிய புராணம் பாடிய சேக்கிழார்தான் பார்த்தாரா? அல்லது சேக்கிழார் பெரியபுராணம் பாடுவதற்குக் கருவியாக இருந்த கலித்துறைத் திருவந்தாதியைப் பாடிய நம்பியாண்டார் நம்பியாவது பார்த்தாரா? அல்லது நம்பியாண்டார் நம்பிக்குப் பெரிய புராணக் கதைகளைச் சொல்லியதாகச் சொல்லப்படும் திருநாரையூர்ப் பொல்லாப் பிள்ளையாராகிய கல்லுப் பிள்ளையார் தான் பார்த்ததா? என்று கேட்டால், “நீ ஒரு நாத்திகன்; உன் முகத்திலும் முழிக்கப்படாது; நீ கடவுள் இல்லை என்று சொல்லும் கூட்டத்தைச் சேர்ந்தவன்; ‘குடியரசு’ – விடுதலை – ‘பகுத்தறிவு’ படிப்பவன்போல் தெரிகிறது; உன்கேள்வி அடாவடியான கேள்வி; உனக்கு நான் விடைசொல்லப் போவதில்லை; அப்பாலே போ!” என்று சொல்லிவிடுகிறான் அந்தக் கடவுளன்பன்.

நான், நீர் சொல்லுகிறபடி, ஒரு நாத்திகன் என்பதும் உண்மையே. கடவுள் இல்லை என்று சொல்லும் கூட்டத்தைச் சேர்ந்தவன் என்பதும் உண்மையே. ‘குடி அரசு – விடுதலை பகுத்தறிவு, படிப்பவன் என்பதும் மறுக்கமுடியாத உண்மைதான். ஆனால், பகுத்தறிவுக்கும் இயற்கைக்கும் பொருத்தமான எதனையும் யார் சொன்னாலும், எந்தச் செய்தித்தாள் வெளி யிட்டாலும், எந்த நூலில் படித்தாலும் அவற்றை உளமுவந்து ஒப்புக்கொள்ளும் இயல்பும் உடையவன் என்பதையும், உம்மைப்போல், ‘ஆ, இவன் நாத்திகனா? இவன் முகத்தில் முழிக்கப்படாது. இவன் கடவுள் இல்லை என்று சொல்லும் கூட்டத்தைச் சார்ந்தவனா? இவனுடன் பேசவுங் கூடாது. இவன் குடியரசு படிப்பவனா? இவனோடு சேர்ந்தால் குடியே முழுகி விடும்” என்று எண்ணும் குறுகிய மனப்பான்மை உடையன் அல்லன் என்பதையும் உமக்குத் தெரிவித்துக் கொள்ளுகிறேன். நிற்கச், சில நாட்களுக்குமுன், நான் காஞ்சியிலிருந்து புறப்பட்டுத், தேர்க்காலிற் பட்டிறந்த ஒரு பசுவின் கன்றுக்காக, அத்தேரை ஓட்டிச்சென்ற தன் புதல்வனை அத்தேர்க்காலிற் போட்டுக் கொன்ற சோழமன்னனுக்குக் காட்சி கொடுத்து, இறந்த கன்றையும், அரசமைந்தனையும் அமைச்சனையும் உயிர்பெற்று எழச் செய்ததாகப் பெரிய புராணத்திற் பேசப்படும் தியாகராயப் பெருமானாகிய சிவன் வாழும் திருவாரூருக்குப் போயிருந்தேன். அப்பொழுது, அப் பெருந்தகைத் தியாகராய சிவம் ஏறிவந்த தேர் அச்சுமுறிந்து தெருவிற் கிடைப்பதையும், அச்சுமுறிந்து தெருவில் கிடக்கும் அந்தத் தேருக்குள் தியாகராய சிவமும் கிடந்து துன்பப் படுவதையுங் கண்ட யான், அங்குள்ளவர்களை நோக்கி, இதென்ன காலவேற்றுமை! உலகிலுள்ள அனைவருடைய துன்பங்களையும் போக்கி அவர்களுக்கெல்லாம் நலமளிக்கும் நயனங்கள் மூன்றுடைய பெருந்தகைச்சிவம் இங்ஙனம் தனக்கேற்பட்ட இடரைக் களைய முடியாது தெருவிற்கிடந்து தவிப்பது ஏனோ என்று கேட்டேன். அதற்கவர்கள், எல்லாம் வல்ல எங்கள் சிவனுக்கு ஏற்பட்ட சீற்றமே தேரைச் சிதைந் தொடியும்படி செய்தது என்றார்கள். நான், அவர்களை மிகவும் பணிவுடன் நோக்கிச், சிவனுக்குச் சீற்றம்எப்படி உண்டாயிற்று? எதற்காக உண்டாயிற்று? யார் பேரில் சீற்றம்? இவ்வூரவர்கள் மீதா? இந்தியாவை நோக்கிப் படையெடுக்க முயற்சிக்கும் சப்பானியர்மீதா? இந்தியாவுக்குச் சுயராச்சியம் வழங்க மறுக்கும் ஆங்கிலர் மீதா? அல்லது இந்தியாவைத் துண்டாடிப் பிரிவினைகேட்கும் முஸ்லீம்களுக்கு ஆதரவாக நிற்கும் அன்பர் இராசகோபாலாச்சாரி மீதா? அன்றித், திராவிட நாட்டுப் பிரிவினைக்காகப் பெருங்கிளர்ச்சி செய்துவரும் எங்கள் தலைவர் இராமசாமிப் பெரியார் மீதா? ஒருவேளை, கடவுளே இல்லை என்று சொல்லும் எம்மனோர் மீதா? யார் மீது? எதற்காக? அந்தச் சிவனுக்குச் சீற்றம் ஏற்பட்டதென்பது தெரிந்தது? கடவுளை நீங்கள் நேரில் பார்த்தீர்களா. அல்லது கடவுள் தானாகவேவந்து எனக்கேற்பட்ட சீற்றங்காரணமாக நானே தேரச்சை முறியும்படி செய்தேன் என்று செப்பினாரா? அன்றி எழுத்து மூலமாய்த் தெரிவித்தாரா? என்பன போன்ற கேள்விகளைக் கேட்டேன், நான் இங்ஙனம் பேசியதைக் கண்ட அவ்வூர்க் கடவுளன்பர்கள், ஓகோ! நாம் என்னவோ என்றெண்ணினோம்; இவன் ஒரு வடிகட்டிய நாத்திகன்; இவனோடு பேசுவதை அந்தச் சிவன் அறிந்தால் இன்னும் பாக்கியுள்ள தேரச்சுகளையும் முறித்துவிடுவார்; ஆகையால் இவன் முகத்தில்கூட முழிக்கப் படாதென்று சொல்லிக் கொண்டே, மெதுவாக, ஒவ்வொருவராக என்னை விட்டு நழுவத்தொடங்கினார்கள். ஒருசிலர் மட்டும் என்னை முறைத்துப்பார்த்துக் கொண்டே நின்றார்கள். நான் அவர்களை நோக்கி ஐயன்மீரே! அரனடிதொழும் அன்பர் குழாங்களே! சீற்றத்தை ஒழிமின்! சிறிதே பகுத்தறிவைப் பயன்படுத்தி யான் கூறும் செய்திக்குச் செவிசாய்மின்! என்று பணிவான பீடிகையோடு பேசத் தொடங்கினேன். நான் இவ்வாறு பேசுவதைக் கேட்டால் மட்டும் என்னை நாத்திகன் என்கிறீர்களே! நான் கேட்கவில்லை, குடியரசு குறிக்கவில்லை, ஆனால், உங்கள் ‘தினமணி’ நான் கேட்கும் இந்தக் கேள்விகளையே கடந்த 21-5-42-இல் கேட்டிருக்கிறதே, அதற்கென்ன சொல்லுகிறீர்கள் என்றேன். நான் இங்ஙனம் கூறியதைக் கேட்டதும் ஒரு காங்கிரசன்பன் என்முன்னே வந்து, தினமணியாவது நாத்திகம் பேசுவதாவது, நீ கூறுவது சுத்தப்பொய் என்று என்மீது பொரிந்து விழுந்தார். நான் உடனே, என்னிடமிருந்த தினமணியை அவரிடம் கொடுத்து, நீரே படித்துப்பாரும் என்றேன். அவர் தினமணியை அதை மறந்துவிடு. இப்போது நான் மனமார நேசிக்கிறேன்.

“ஒரு தேசத்தை மற்றொரு தேசத்தார் ஆளுவதற்குக் கூறப்படும் விசித்திரமான காரணம். கடவுளின் சார்பாகத் தர்மகர்த்தாவாக இருந்து அந்தத் தேசத்தை ஆளுகிறார்களாம். கடவுளை எந்த இடத்தில் இவர்கள் சந்தித்தார்கள்; கடவுள் வாயினால் அதிகாரம் கொடுத்தாரா; அல்லது எழுத்து மூலமாகக் கொடுத்தாரா? என்ற விஷயங்கள் யாருக்கும் தெரியாது. இது இப்பொழுது நடை பெற்றுவரும் ஏமாற்று.”

என்று படித்ததும் அந்தக் காங்கிரசன்பர் ஒன்றும் பேசாமல் நடையைக் கட்டி விட்டார். இதுவும் கால வேற்றுமைதான் என்று மற்றும் அங்கு நின்றவர்கள் சொல்லிக்கொண்டே போனார்கள். இந்தத் தினமணிக்கு இப்படியுமா புத்தி தடுமாறும் என்று இயம்பிய வண்ணம் போயினர் ஒரு சிலர்.

அன்பர்களே! ‘தினமணி’ என்ற செய்தித்தாள் ஆரிய ஆதிக்கம் ஒன்றையே தனது குறிக்கோளாகக் கொண்டு வேலை செய்துவந்த போதிலும், அதன் ஆசிரியர் ஒரு தமிழனாய் இருப்பதால், தமிழ் மக்கள் செய்துவரும் பகுத்தறிவுக் கிளர்ச்சி யின் வேகம் எந்தத் தமிழனையும் தட்டி எழுப்பிவிடும்; அதனால், தமிழர்கள் என்றைக்காவது ஒருநாள் ஒன்றுபட்டுத் தன் மதிப்பியக்கத் தோழர்களாவார்கள் என்பதை அறிவுறுத்தவே, இந்து மதமும் தமிழரும் என்ற தலைப்பில் இச்செய்தியையும் நுழைத்தேன்.

திருநாவுக்கரசர், “நினைந்துருகும் அடியாரை நைய வைத்தார்” என்ற சொற்றொடரை முதலடியாகக் கொண்டு பாடிய தேவாரத்தைத் “திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூரெம் பெருமானார் நல்லவாறே” என்று முடித்திருக்கிறார். இதில், பேரன்பும் பேரிரக்கமும் வாய்ந்ததாகப் பேசப்படும் ஒரு கடவுள், தன்னை மெய்யன்போடு வழிபடும் அடியவர்களை நையப்புடைத்தல், கடவுள் இலக்கணத்திற்கே மாறுபட்ட தென்பதை இதற்கு முன்னர் எழுதிய கட்டுரைகளில் நன்கு தெளிவுபடுத்தியுள்ளேன் எனவே, ‘திருவடி என் தலைமேல் வைத்தார்” என்ற சொற்றொடருக்கும் நேரானபொருள் என்ன வென்றால், திருநாவுக்கரசருடைய தலையில் கடவுள் தனது காலால் உதைத்தார் என்பதேயாகும். ஆனால், கடவுள் திருநாவுக் கரசரை உதைத்தார் என்ற உண்மையை வெளிப்படையாகச் சொல்லாமல், திருவடி தலைமேல் வைத்தார் என்று கூறியது மதத்தலைவர்கள் கையாளும் சூழ்ச்சிகளில் ஒன்று. இல்லாத ஒன்றை இருப்பதாகச் சொல்லித் தங்கள் பிழைப்புக்கு ஆதரவு தேடிக் கொள்பவர்கள் எல்லாரும் இத்தகைய நயவஞ்சக முறையையே கையாள்வது வழக்கம். கடவுள், திருநாவுக்கரசரை உதைத்தார் என்று சொல்லுவதற்கும், கடவுள் தனது திருவடியை அவர் தலை மேல் வைத்தார் என்று சொல்லுவதற்கும் உள்ள வேறுபாடு, ஒருவனைப் பார்த்து ‘இவன் மாடுபோல் இருக்கிறான்’ என்பதற்கும், ‘இவன் பசுப்போல் இருக்கிறான்’ என்பதற்கும் உள்ள வேறுபாட்டையே ஒத்திருக்கிறது. எங்ஙனம், ‘பசு’ என்றாலும் ‘மாடு’ என்றாலும் ஒரு பொருளையே குறிக்குமோ, அங்ஙனமே, திருவடி தலைமேல் வைப்பதும், உதைப்பதும் ஒரு பொருளையே குறிக்கும் என்க.

இனித், திருநாவுக்கரசர் தாம் பார்ப்பனரால் அடைந்த துன்பங்களை வெளிப்படையாகச் சொல்லாமல் இங்ஙனம் மறைபொருளாக வைத்துக் கூறியதற்கு செய்த துன்பத்தைப் பொறுத்து அவனுக்கு நன்மையையே செய்வதும், ஒருக்கால் அவன் செய்த துன்பத்தைப் பிறர்க்கெடுத்துச் சொல்ல வேண்டிய இன்றியமையாமை ஏற்பட்டால், கேட்போர் உள்ளம் கொதிப் படையாமல் இருக்கும் முறையில் அந்நிகழ்ச்சியை அமைதிதரும் சொற்களால் அழகாகக் கூறி அதன் அடிப்படைப் பொருளை விளங்கவைப்பதும் தமிழ் மக்களுக்கு இயற்கையாகப் படிந்த குணங்களில் ஒன்றாகும். எனவே, திருநாவுக்கரசர் ஒரு உண்மைத் தமிழனாய் இருந்தமையால், தான் பார்ப்பனரால் அடைந்த துன்பங்கள் தன்னை மட்டும் பொறுத்ததாய் இல்லாமல், தன்னையொத்த தமிழ்மக்களையும் அத்துன்பங்கள் வருத்தி வதைக்கும் என்பதை நன்கறிந்தவராகையால், அவற்றைத் தன்னைமட்டும் குறித்தவை என்றெண்ணிப் பொறுத்துக் கொள்ளாமல், எல்லாத் தமிழ்மக்களும் பார்ப்பனக் கொடுமை களை உணர்தல் பெரிதும் இன்றியமையாததென்று கருதிய நிலையில் இங்ஙனம் மறைபொருளாக வைத்துக் கூறியுள்ளார்.

“ஆரியன் கண்டாய், தமிழன் கண்டாய்” என்று ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நமது நாவுக்கரசர் கூறியுள்ளார். ஆரியன் வேறு; தமிழன் வேறு என்ற கொள்கை தோன்றி ஆயிர மாண்டுகள் கழிந்தும், இன்றும் அதன் உண்மையை நம்மவர் உணரமுடியவில்லை என்றால், அதற்குக் காரணம்: நம்மையும் ஆரியரையும் ஒன்றாய்ப் பிணைத்துக் கொண் டிருக்கும் இவ்விந்து மதமே என்பதை எவர்தான் மறுக்கமுடியும்? இந்து மதத்தின் பேரால் எழுதப்பட்ட புராண இதிகாசங்களன்றோ ஆரியர்களைப் பூசுரராக்கித் தமிழ்மக்களை அவர்களுக்கு அடிமைகளாக்கி விட்டன! இந்துமதத்தின் பேரால் உண்டாக்கப்பட்ட சட்ட மன்றோ, ஒரு பார்ப்பனன் ஒருவனைக் கொலை செய்தால் அப்பார்ப்பனனுடைய தலையை மொட்டையடித்தால் போது மென்றும், ஒரு தமிழன் ஒருவனைக் கொன்றுவிட்டால் அத் தமிழனைக் கொன்றுவிட வேண்டுமென்றும் கூறிக் குலத்துக் கொரு நீதி வகுத்துள்ளது! இந்து மதமன்றோ, தமிழனான திருநாவுக்கரசரை ஒருகூலிக்காரன் நிலையில் வைத்து அவர் கையில் புற்பூண்டுகள் செதுக்கும் ஒரு உழவாரத்தைத் தாங்கும் படி செய்தது! இந்துமதமன்றோ, பார்ப்பனனான திருஞான சம்பந்தரை ஒரு சிற்றரசன் நிலையில் வைத்து அவன் பல்லக் கேறும்படி செய்தது? எனவே, ஆண்டிலும் அறிவிலும் முதிர்ந்த நாவுக்கரசர் பார்ப்பனரால் உதையுண்டதற்குக் காரணம், அவர் இந்து மதமாகிய சைவசமயத்தைத் தழுவியிருந்தமையே என்பதை ஈண்டுக்கூறாமல் இருக்க முடியவில்லை. இன்றும்கூட, அறிவாற்றலிற் சிறந்து விளங்கும் தமிழ் மக்களிற் பலர், ஆரியர்களின் அடிமைகளாக இருப்பதோடு, தாங்கள் சற்சூத்திரர் என்ற ஆரியக் கூற்றையும் ஒப்புக்கொண்டிருப்பது கண்கூடு.

இனித், திருநாவுக்கரசர் தாம் பார்ப்பனரால் அடைந்த துன்பங்களை வெளிப்படையாகக் கூற முடியாமற் போனதற்கு இன்னொரு காரணம் என்னவென்றால், அந்தக் காலத்தில் அன்பையும் அறிவையும் வளர்த்த சமணம், புத்தம் ஆகிய மதங்களை ஆரியர்கள் தங்கள் சூழ்ச்சியால் ஒழித்துக், கொலையும் கொடுமையும் நிறைந்த இந்துமதத்தைத் தமிழ் நாட்டில் பரப்பி அம்மதத்தையே அக்காலத் தமிழ்வேந்தரும் பின்பற்றும்படி செய்தமையேயாகும். ‘அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி’ என்றபடி, அக்கால அரசரின் ஆதரவையும் செல் வாக்கையும் பெற்றிருந்த ஆரியப்பார்ப்பனர்; தங்கள் இந்துமதக் கொள்கைக்கு மாறாக நடப்பவர்களைத் தண்டிப்பதில் முழு உரிமைபெற்றவர்களாய் இருந்தார்கள். எனவே, ஆரியப் பார்ப்பனரின் கொடுமைகளைக் கண்டு அவர்களைத் திருத்த முயன்ற திருநாவுக்கரசரைப் பார்ப்பனர் தங்கள் மனம்போல் உதைக்கவும் அடிக்கவும் ஏற்பட்டது வியப்பல்ல.

இனித், திருநாவுக்கரசருக்கு ஏற்பட்ட துன்பங்கள் பார்ப்பனரால் ஏற்பட்டதல்ல வென்றும், சிவனே திருநாவுக் கரசரைத் தூய்மையாக்குவதன் பொருட்டுத் தம்முடைய திருவடியை அவர் தலைமேல் வைத்தார் என்றும் மக்கள் நம்பவேண்டுமென்பதற்காகவே கதையை இங்ஙனம் மாற்றி எழுதிவைத்தார்கள். அதோடு, திருநாவுக்கரசரைக் கொண்டே அதுகுறித்த பதிகமும் பாடும்படி செய்துவிட்டனர் அந்தப் பார்ப்பனர். என்றாலும், உண்மை நிகழ்ச்சி இதுவென்பதைக் காட்டாதொழிதல் ஒரு உண்மைத் தமிழனுக்கு முறையாகா தென்று எண்ணிய நாவுக்கரசர், பார்ப்பனர் தமக்குச் செய்த கொடுமைகளை இலைமறை காயாக அத்தேவாரப் பதிகத்தில் புகுத்தியுள்ளார். அரசன் ஆணைக்கும், ஆரியரின் கொடுமைக்கும் அஞ்சிய ஒரு தமிழன், தனது கொள்கைக்கு மாறாக நடக்குமாறு கட்டாயப்படுத்திய போதிலும், உண்மைக்கு அழிவு உண்டாகாத முறையில் நடந்துகொண்டதற்காக நாவுக்கரசரை நாம் பாராட்டாமல் இருக்க முடியாது.